துப்பாக்கி பிரயோகத்திற்கு உத்தரவிட்டது அமைச்சர்களே – அதிர்ச்சித் தகவல்
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக நடவடிக்கையில் 3 ஆயுதங்களின் ஊடாக 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போராட்டத்திற்கு முந்தைய நாள் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலைமையிலான கூட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டாம் என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருக்க போராட்டத்தின் போது எவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன என்பவரே உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு அந்த உத்தரவை வழங்குமாறு கோரியது பொலிஸ்மா அதிபரோ அல்லது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களோ அல்ல. ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரே கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை நான் பொறுப்புடனேயே தெரிவிக்கின்றேன்.
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களே இவ்வாறு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு குறித்த பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.