மன்னாரில் 10 வயது சிறுமி படுகொலை – அதிர்ச்சித் தகவல்


மன்னார் – தலை மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல் போன நிலையில் இன்று (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த சிறுமி உள்ளடங்களாக சிறுமியின் சகோதரங்கள் 4 பேர் தலைமன்னார் கிராமத்தில் உள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (16) இரவு குறித்த 10 வயதுடைய இயான்சி என்ற சிறுமி அம்மம்மாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, குறித்த சிறுமியை தேடி வந்துள்ளனர்.
.
மேலும் குறித்த தென்னை தோட்டத்தில் சென்று குறித்த சந்தேக நபரிடம் வினவிய போது தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் மீண்டும் தேடியுள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது குறித்த சிறுமியின் பின்னால் குறித்த நபர் செல்வது தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த நபரை பிடித்து விசாரணைகளுக்கு உட்படுத்தி இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) அதிகாலை சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தில் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் கொலையாளிக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *