நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு – 25 வீடுகள் சேதம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ராஜாங்கனை, அங்கமுவ, கலாஓயா, உடவலவை, தப்போவ மற்றும் முருதவெல ஆகிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீ ஓயா, ஊறு பொகு ஓயா, உடவலவை ஓயா, கலா ஓயா, அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா கங்கை போன்றவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை, கண்டி, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (07) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதேவேளை நேற்று (06) பிற்பகல் வெயங்கொட வந்துரவ பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்து 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.