மீண்டும் போராட்டம் வெடிக்கும் – சஜித் எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது என்றும், அதன் புதிய போக்கே சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதும்,சீர்குலைப்பதும் தடுப்பதும் என்றும்,அந்நோக்கத்திற்காக,”நிகழ் நிலைக் காப்பு” என்ற வார்த்தை முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் உரிமை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கான முனைப்பு நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த ஊடக அடக்குமுறையானது பயங்கரவாதம் என்பதால் இதற்கு இடம்கொடுக்கப்போவதில்லை என்றும்,இந்த ஊடக ஒடுக்குமுறைக்கும் சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்கும் எதிராக மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்றும்,சமூக ஊடகங்களின் நிகழ்ச்சி நிரல்களை ஜனாதிபதி மற்றும் நாட்டின் அரசாங்கத்தின் கைகளில் எடுக்கப் போகும் இந்த முயற்சிகளில் இன்னொரு போராட்டம் உருவாகும் என்றும்,இதன் மூலம் பெரிய பதவிக் கதிரை கூட இழக்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மாளிகைகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு இனிமேலும் மக்களிடமிருந்து மறைந்திருக்க முடியாது என்றும்,களத்திற்குச் சென்று மீனவர்களின் துன்பத்தை கேட்டறியுமாறும்,அறைகளுக்குள் இருந்து கொண்டு ஊடகங்களை அடக்கவும், ஊடக சுதந்திரத்தை அழிக்கவும் ஏற்பாடுகளை செய்வதற்குப் பதிலாக களத்தில் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும், ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அத்தகைய அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதோடு,எதிர்க்கட்சி ஒருபோதும் இதற்கு இடமளிக்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நமது நாடு ஓரு தீவாக இருந்தாலும்,நாட்டில் மீன் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும், மீன் உற்பத்தியை ஏற்றுமதித் தொழிலாகக் கட்டியெழுப்பக்கூடிய தருணத்தில் தற்போதைய அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழிலில் உதாசீன செயற்பாட்டையே பின்பற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது இன்றைய தெவிநுவர பிரதேசத்திற்கான விஜயத்தின் போது, தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்தும் ஆராய்ந்தார்.
பழுதடைந்த மீனவப் படகுகள்,பயன்படுத்த முடியாத படகுகள் என 40 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் இடத்தை பிடித்து வைத்துள்ளதாகவும், அவற்றை அகற்றுவதற்கு மீன்பிடி துறைமுக முகாமையாளர்கள் நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.