மன்னார் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு. கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) மாலை பாடசாலையில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு. வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே. வொலன்ரைன் கலந்து கொண்டார்.

சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சாதனை படைத்த மாணவர்கள் விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி யாழ். ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை 9ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.

வடமாகாண கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த குறித்த உதைபந்தாட்ட போட்டி கடந்த 3 நாட்கள் இடம் பெற்று வந்தது.

குறித்த போட்டியில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 39 பாடசாலை அணிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியினை எதிர்கொண்டிருந்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் விளையாடுவதற்குரிய வாய்ப்பை பெற்றுள்ளது.

25 வருடங்களின் பின்னர் மன்னார் மாவட்டத்தின் மடு. வலயத்தில் உள்ள இலுப்பைக் கடவை பாடசாலையின் 18 வயதுப்பிரிவு ஆண்கள் முதன் முறையாக உதைப்பந்தாட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.