மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (06.07.2023) நன்னீர் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம், இறாலோடை ஆகிய கடற்றொழில் அமைப்புக்கள் இணைந்து குறித்த இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து வாவி நீரை அசுத்தப்படுத்தாதே, மீன் வளத்தை அழிக்காதே, ‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’ ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது வட்டவான் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையினால் குறித்த வாவி அசுத்தமடைந்து வருவதாகவும், குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினால் ஆற்றில் மீன்கள் இறந்து காணப்படுவதுடன் மீன், இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தங்கள் பொருளாதார ரீதியில் பின்நோக்கி போவதாகவும் முறைபாடு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.