யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்படப் பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்துத் தகவலறிந்த பொலீஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். “மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”, “மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள் அடங்கிய பாதாதைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.