வெடுக்குநாறி மலையில் பல்டியடித்த அமைச்சர்கள்


வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றையதினம் மீண்டும் வைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று பல்ட்டி அடித்தனர்.

அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வசின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்தவாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. அதன்பிரகாரம் முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட்ட சேதப்படுத்தப்பட்ட சிலைகளை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்கனவே சிலைகள் இருந்த பகுதியில் மீண்டும் வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் நேற்றையதினம் ஆலய நிர்வாகத்தினை மீறி ஆலயவளாகத்தி்ல் சிலதரப்புக்கள் தான்தோன்றித்தனமாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டமையால் மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமால் போயிருந்தது.

இதேவேளை எமது பிரசன்னத்துடன் இன்றையதினம் விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்பிற்கும் உறுதிபடத் தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன்,ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

எனினும் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்கமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள்தெரிவித்தனர். அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதேவேளை நீங்கள் சிலைகளை வைப்போம் என்று அறிக்கை விடும் போது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கான உரிய பதில்கள் அவர்களால் வழங்கப்படவில்லை.

அத்துடன் வருகைதந்த அமைச்சர்கள் குழு ஆலயத்தின் பிரதான மலைப்பகுதிக்கு செல்லாமல் கீழே நின்று சுற்றுலாவிற்கு வந்ததுபோல அவதானித்து விட்டு திரும்பிச்சென்றனர். இதனால்
இன்றையதினம் விக்கிரகங்களை வைக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.

நேற்றையதினம் ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளின் காரணத்தால் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருப்பதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

IMG 6867
IMG 20230402 12193653
IMG 20230402 12195919
IMG 20230402 12201276
IMG 20230402 12201561
IMG 20230402 12203251
IMG 20230402 12203704
IMG 20230402 12204188
IMG 20230402 12204421
IMG 20230402 12204898

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *