வெடுக்குநாறி மலை விவகாரம் பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து எதிர்வரும் 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற நெடுங்கேணி பொலிசார் வவுனியா நீதவான் நீதிமன்றில் நேற்று (28.03) மனுத்தாக்கல் செய்தனர்.
இதன்போது, குறித்த மன்றில் இருந்த சட்டத்தரணி திருச்செல்வம் திருஅருள் தலைமையிலான சட்டத்தரணிகளான சபீஸ், சியாத், திபின்சன், கேதீஸ்வரன், மதுஞ்சளா, நிவிதா, ஜிதர்சன், இளஞ்செழியன் ஆகியோர் பொலிசாரின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், குறித்த விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் எனவும் கோரினர்.
சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 30 திகதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குற்றவாளிகளை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.