மன்னார் அடம்பன் விபத்தில் இளைஞன் பலி – இருவர் படுகாயம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன் போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதன் போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.