மைதான தகராறு – கட்டையால் அடித்து பெண் கொலை
வலைப்பந்தாட்ட மைதானம் தொடர்பான தகராறு நீண்ட நேரம் தொடர்ந்ததை அடுத்து இன்று (20) இடம்பெற்ற கலகலப்பில் பெண் ஒருவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முறுவ பிரதேசத்தில் வசித்து வந்த ஹெட்டியாரச்சி தயானி என்ற 52 வயதான பெண்ணே கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதுவெல்ல பிரதேசத்தில் உள்ள தனது காணியில் வலைப்பந்தாட்ட மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் காணிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவிக்கின்றார்.
குறித்த காணிக்கு அருகில் வசிக்கும் ஒருவரிடம் இவ் விடயம் தொடர்பில் கேட்ட பொழுது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்தப் பெண்ணை சந்தேக நபர் தாக்கியுள்ளார்.ஆத்திரமடைந்த பெண் அருகிலிருந்த தடியை எடுத்து குறித்த நபரை அடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது அதே தடியைப் பெண்ணின் கையிலிருந்து பறித்து அந்தப் பெண்ணை அவர் பலமுறை கடுமையாகத் தாக்கியுள்ளார். தலையில் பலமுறை அடிபட்டதுடன் குறித்த பெண் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மாதம்பே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று காயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரையில் குற்றப்புலனாய்வு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் பரிசோதகர் மதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 34 வயதான சந்தேக நபர் ஹலாவத்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.