காவலர் கன்னத்தில் அறைந்த பெண்
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தரை கன்னத்தில் அறைந்ததுடன், வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஜா-எல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஜா -எல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையில் இருந்து போக்குவரத்து பிரிவு காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
“நான் காவல் துறையினருக்கு பயப்படாத பெண்“ என்று கூறி, தன்னை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளை குறித்து பெண் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் விட்டுச் சென்ற உந்துருளி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கண்டறிந்து, அவரைத் தேடி சென்றபோது அந்தப் பெண் நீண்ட காலமாக மனநல நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவரென வீட்டார் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.