கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த 11 வயது சிறுவன்
காத்தான்குடி பகுதியில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்த நபரே வீட்டுக்குள் இருந்த சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவனின் தந்தை நேற்று காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுவன் சந்தேக நபரால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை அன்றைய தினம் கைது செய்தனர்.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, பொலிஸார் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்க உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.