இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் நேரடி காணொளியில் ரஞ்சன் ராமநாயக்க இதை கூறினார்.
கடந்த 3 மாதங்களாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது கிட்டத்தட்ட 500 மடிக்கணினிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினராலும், வணிகர்கள் மற்றும் சாதாரண குடிமக்களாலும் இந்த மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மடிக்கணினிகள் விற்பனைக்கு உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் போலி விளம்பரங்களை மறுத்த இவர், மடிக்கணினிகள் தன்னால் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்த விரும்புவதாகவும், மாணவர்களுக்கு விநியோகத்திற்காக அதிக மடிக்கணினிகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மடிக்கணினிகள் தேவைப்படுபவர்கள் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து, அவரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தன்னை தொடர்புகொண்டு மடிக்கணினிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.