ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அழைப்பு


தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்பட்டோர் , அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் என அரசின் திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?

ஜனாதிபதி பொங்கல் விழாவை மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம் பெற இருக்கின்ற தருணத்தில் 1 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று நிறைவவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல் நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்தவீக போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு, அனைத்து சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *