சமுர்த்தி கொடுப்பனவுகள் ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம்

திறைசேரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிதிப் பிரச்சினைக்கு திறைசேரி முகம் கொடுத்துள்ளதாக, ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டதன் பின்னர் திறைசேரி போதிய வருமானத்தை ஈட்டவில்லை என்பதன் காரணமாக இதற்கான போதிய நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், யார் ஆட்சி செய்தாலும் பொதுமக்களின் வரிப் பணம் மற்றும் வரியற்ற வருமானம் மூலம் திறைசேரிக்கு கிடைக்கும் நிதியிலிருந்தே இவ்வனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடமிருந்தான வரி வருமானத்திலும் பார்க்க செலவு அதிகரித்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறாயின் இத்தனை காலமும் இது எவ்வாறு சாத்தியமானது என கேள்வி எழுப்பப்படலாம். இத்தனை காலமும் பணம் அச்சிட்டு, அச்சிட்டு, கடன் வாங்கியே இதனை மேற்கொண்டு வந்துள்ளோம்.
சுதந்திரமடைந்து 75 வருடமாகியும் எடுத்த கடனை கொடுக்க முடியாமல் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
தற்போது கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களால் பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளார்கள் எனவும். பணம் அச்சிட அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் உரிய மூலோபாயங்களை பயன்படுத்தி குறித்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் 5% இனை குறைக்க நேரிடுமென, அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.