நிர்வாணமாக வீதியில் இழுத்துசெல்லப்பட்ட இளம்பெண் மரணம்


இந்தியாவின் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில், டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார்.

விபத்து
அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு மாருதி பொலேனோ காருடன் அவரது இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது எனினும் அந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.

அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை காரில் சிக்கியுள்ளது. விபத்தை பொருட்படுத்தாது கார் நிற்காமல் சென்றதால், பெண்ணின் ஆடை கிழிந்ததால், அவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் ஒருவர் அதிகாலை சுமார் 3 மணி அளவில் காவல்துறைக்கு புகார் தந்துள்ளார்.

எனினும் விபத்தை ஏற்படுத்திய கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க இயலாமல் போயுள்ளது. பின்னர் காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அந்த நபர் கஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று நிர்வாணமாக கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காரை பறிமுதல் செய்தனர்.

காரில் சென்ற தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி துணை நிலை ஆளுநர் இரங்கல்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ட்விட்டரில், “சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன்.

இது மனிதாபிமானமற்ற கொடுங்குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

அனைத்து கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சமூகம் பொறுப்பானதாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ” என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில்,

“20 வயது இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று உடற்கூறாய்வில் சோதனை செய்யப்பட வேண்டும்.

நேர்மையான, நியாயமான, துரிதமான விசாரணை நடைபெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. புத்தாண்டில் டெல்லியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *