யாழ்.பருத்தித்துறையில் 17 வயது சிறுமி 2 வருடங்களாக பொலிஸாரினால் வல்லுறவு
ஆபாச காணொளிகளை காட்டி, மிரட்டி பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று,
ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, அதனை காணொளியாக எடுத்து வைத்து, அதனை காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை இரண்டு உத்தியோகத்தர்களும் மிரட்டி, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (டிச. 29) பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது,
சிறுமி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது.
இதேவேளை குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தம்மிடம் இருந்த காணொளியை பாடசாலை சிறுவர்கள் சிலருக்கு காண்பித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.