யாழில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை
மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரியுள்ளது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கோரிக்கையை இலங்கையின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் இந்தியாவின் சார்பில், அந்த நாட்டின் இந்து சமுத்திர பிராந்தியங்களுக்கான இணைச் செயலாளர் பூனீட் அகர்வால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கோரிக்கையின்படி காங்கேசன்துறைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனினும் இன்னும் திகதி அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் காங்கேசன்துறைக்கும், தனுஸ்கோடி மற்றும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலும் பயணிகள் கப்பல் சேவைகளை நடத்துவது பொருத்தமானது என்று இந்திய அதிகாரியான அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மத்தளை வானூதி நிலையத்துக்கான வானூர்தி சேவைகளை மேற்கொள்வதற்கான கோரிக்கையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்தபோது, அதற்கு இந்தியா உதவும் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.