மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான அறிக்கை
மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்..
அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையம் ஒன்று மொனறாகலை மாவட்டத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டதற்கு அமைவாக இந்த பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையமொன்றை மொனறாகலை மாவட்டத்தில் தாபித்தல்
மொனறாகலை மாவட்டம் புவிசார் இடப்பரப்பில் இரண்டாவது பெரிய மாவட்டமாக இருப்பினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எந்தவொரு அலுவலகமோ அல்லது பயிற்சி நிலையமோ குறித்த மாவட்டத்தில் இயங்கவில்லை. அம்மாவட்டத்திற்கு அண்மைய பயிற்சி நிலையங்களாக இருப்பது, பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பயிற்சி நிலையம், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பயிற்சி நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.
தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனராகலை பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. அதன்மூலம் மொனராகலை மாவட்டத்தில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
அதற்கமைய, தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனராகலை பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையம் மற்றும் வளாகத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.