கல்வி சார்ந்த அணுகலில் பாராபட்சம் நிலவக்கூடாது – சஜித் பிரேமதாஸ
பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது சஜித் பிரேமதாஸவிற்கு பொருட்கள் பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்றும் அதற்கு மேல் எதுவும் தெரியாது என இந்த சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,இலங்கையின் 74 வருட அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆற்றிய பாரம்பரிய வகிபாகத்திற்கு அப்பால் தற்போதைய எதிர்க்கட்சி வேறுபட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்வி சார்ந்த அணுகலில் பாராபட்சம் நிலவக்கூடாது எனவும்,எனவே கிண்டல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியதிகாரமின்றி சேவை செய்ய சவால் விடுவதாகவும் தெரிவித்தார்.
நாற்பத்திரண்டு பேரூந்துகளையும் பரோபகாரிகளின் உதவியுடன் வழங்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவற்றிற்கு அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக நாற்பத்து ஆறு இலட்சம் (4,600,000.00) ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று இன்று(06) தெரணியகல சிறி சமன் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.