ஓர் அலகுக்கு 56.90 ரூபா கட்டணம் அறவிடப்பட வேண்டும் – மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர


அடுத்த வருடம் நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபா செலவிட வேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஓர் அலகுக்கு 56.90 ரூபா என்ற நிலையான கட்டணம் அறவிடப்பட வேண்டும். அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது தமது யோசனை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி நாட்டின்ல 67 இலட்சத்து 9 ஆயிரத்து 574 மின்சார வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், ஓர் அலகிற்கு தற்போதைய சராசரி கட்டணம் 29.14 ரூபா அறவிடப்படுகிறது.

இதனால் 423.5 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

0-30 அலகு தொகுதியில் 1,460,828 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 8 ரூபாவை செலுத்துகின்றனர்.

30-60 அலகு தொகுதியில் 1,683,172 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 10 ரூபா செலுத்த வேண்டும்.

60-90 அலகு தொகுதியில் 1,702,515 நுகர்வோர் உள்ளனர். ஓர் அலகு்ககாக 16 ரூபாவை அவர்கள் செலுத்த வேண்டும்.

90-180 அலகு தொகுதியில் 1,559,131 நுகர்வோர் உள்ளனர் ஓர் அலகுக்காக 50 ரூபாவை செலுத்த வேண்டும்.

180 மேற்பட்ட அலகு தொகுதியில் உள்ள 303,928 நுகர்வோர் ஓர் அலகுக்காக 75 ரூபாவை செலுத்துகின்றனர்.

எனவே இதில் சமநிலை இல்லாத நிலைமை இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் மின்சாரத்தின் ஓர் அலகுக்கான கட்டணத்தை 56 ரூபாய் 90 சதமாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கீழ் அடுக்கு (90 அலகுக்கு கீழ்) மின்சார நுகர்வோருக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படும்.

இதில் ஒரு பகுதியை, அதிகளவில் மின்சாரத்தை நுகர்பவர்கள் செலுத்தும் மேலதிக தொகையை கொண்டும், மீதமானவை திறைசேரியினாலும் ஈடுசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *