மட்டக்களப்பில் உழவு இயந்திரத்துடன் மோதிய கார் – ஒருவர் பலி, 5 பேர் காயம்
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் இன்று (27) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நல்லராசா நேசராசா என்ற ஆ6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கரை வலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காரில் பயணித்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்க வந்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.