வவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி – மாவட்ட செயலகம் முற்றுகை
ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்திற்கு அதிகாரிகளை சந்திக்க வருவதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூட முற்பட்டனர்.
எனினும் அவர்களை குறித்த பகுதிக்கு செல்ல விடாது பொலிஸார் தடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அவ்விடத்திலேயே நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து பொலிஸார் பேருந்தொன்றை போராட்டக்காரர்களுக்கு முன்புறமாக நிறுத்தி ஜனாதிபதிக்கு போராட்டம் இடம்பெறுவது தெரியாதவாறு தடுத்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு பொலிஸாரை தள்ளியவாறு போராட்டகாரகள் முன்னோக்கி செல்ல முற்பட்ட போதிலும் அது சாத்தியமின்றி போனது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறியதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை மாவட்ட செயலகத்தின் நுழைவாயில் சென்றடைய பொலிஸார் அனுமதித்தனர்.