யாழில் 30 வருடங்களாக காத்திருக்கும் சாந்தனின் தாயார் உருக்கம்


எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் .அவருடன் நான் சிறிதுகாலம் வாழ வேண்டும். அதற்காத்தான் நான் உயிருடன் இருக்கிறேன் என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனின் தாயார் , தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனின் தாயார் யாழ்ப்பாணம், வடமராட்சி – உடுப்பிட்டியில் வசித்து வருகின்றார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “30 வருடங்களாகக் கோயில்களகத் திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

எனது மகன் விடுதலையாவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. பேரறிவாளனை விடுதலை செய்ததில் இருந்து எனக்குப் பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று ஏக்கமாக இருந்தது.

அது இப்போதுதான் நிறைவேறியது. எனது பிள்ளைக்கு இப்போது 53 வயது. 30 வருடங்களைச் சிறையிலேயே தொலைத்துவிட்டார். எனது உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான் என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

https://youtu.be/XfyTn6EgDJE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *