கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், கடந்த 1ம் திகதி புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன் போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் புளியம்பொக்கணை பகுதியில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மூவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்லாறு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் பவிராஜ் என்ற 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.