மர்மங்கள் நிறைந்த நிலாவரைக் கிணறு


யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு. இது பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது.

யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராச வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, J/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் உள்ள நவக்கிரி என்னும் ஊரில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது.

இக்கிணற்றிற்கு அருகில் நவசைலேசுவரம் என்னும் ஓர் சிவனாலயமும் உண்டு.

கிணற்றில் முதல் ஆய்வு
1824 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அப்போதைய அரச பிரதிநிதி ஃவேர்டிபில் ஒக்லான்ட் ஃகைகின்னின் அனுசரணையுடன் நிலாவரையின் ஆழம், நீர் மற்றும் வேகம் என்பன பற்றி ஆராயபட்டது.

இந்த ஆய்வின் பயனாக இதன் ஆழம் அப்போதைய அப்போதைய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற்றாற் போல் கண்டுபிடிக்கப்பட்டது… அப்போது இதன் ஆழம் 164 அடியாகாவும் கடல் மட்டத்தில் இருந்து 0.25 அடி ஆழத்தில் நீரைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்கு சொந்தமாகவுள்ள நிலாவரை கிணற்றின் பராமரிப்புப் பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது.

இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாதராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் நவர்கிரி, நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மருமங்களையும் வியப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், எந்தவொரு ஆய்வாலும் இதன் ஆழத்தையோ உருவாக்கத்தைப் பற்றியோ முடிவுகளைத் தர இயலவில்லை.

இந்நிலையானது கடந்த 2016ஆம் ஆண்டோடு ஒரு முடிவிற்கு வந்தது. ‘சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள் ‘ சுழியோடிகள் – சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள்.

சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள், படுவிகளின்(robot) உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், அனைத்து புதுமையான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் 55.5m (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. அதாவது சராசரியாக இரண்டு பனை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது. இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது.

அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. சுழியோடிகள் கொண்டு சென்ற படுவிகள் எடுத்த நிழற்படங்களின் மூலம் கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

அவற்றில் ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றைய இரண்டும் வண்டிலென அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித புலனங்களும் கிடையாது.

வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவை உள்விழுந்து பல நூற்றாண்டுகளாகலாம் என்று என அனுமானிக்க முடிகிறது. ‘அடியில் உள்ள மாட்டு வண்டிகள் ‘ படுவிகள்(robot) செய்த ஆய்வில், கிணற்றின் அடியில் பல திசைகளை நோக்கி, பல நீரடி பிலங்கள்(under water cavern) காணப்படுகின்றன.

இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணி நேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என செவிவழிக்கதைகள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *