அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான ஓய்வூதியம் உரிய முறையில் வழக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர், தற்போது அரச சேவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும், 25 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட அளவிலானோர் ஓய்வுபெறவேண்டி ஏற்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை, 65 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பாதீட்டில், அந்த வயதெல்லையானது, 60 ஆக குறைக்கப்பட்டது.
இதற்கமைவான சுற்றறிக்கை பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.