வவுனியாவில் கோவில் திருவிழாவில் வாள்வெட்டு – 3 பேர் படுகாயம்
ஆலய திருவிழாவின்போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் வவுனியா – பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.
நேற்று (08 ) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன்,
வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன. இச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள்,
பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து பொலிசாரால் வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னரே ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து
அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் திரண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்
நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.