கன்னித்தன்மையை இழந்த பெண் – 10 லட்சம் ரூபாய் அபராதம்
திருமணமான முதல் நாள் நடத்திய சோதனையில் கன்னித்தன்மை இல்லாததால், 24 வயது பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் சன்சி எனப்படும் நாடோடி சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் திருமணத்தில், ‘குக்காடி பிரதா’ என்ற வழக்கம் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, பெண்ணுக்கு திருமணம் ஆன உடன் அவரது கன்னித்தன்மை பரிசோதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கன்னித்தன்மை இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கணவர் வீட்டார் பெண்ணை அடித்து, உதைத்து துன்புறுத்தினர்.
ஒரு கட்டத்தில், தான் ஏற்கனவே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான உண்மையை அந்த பெண் தெரிவித்தார். இது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கணவர் வீட்டார் உள்ளூர் பஞ்சாயத்தை கூட்டினர்.
அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. மணமான பெண் அடித்து, உதைக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கணவர் வீட்டார் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.