யாழில் மது போதையில் மதிலுடன் மோதி விபத்து – படுகாயமடைந்த இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்த மதிலுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் 9 நாட்கள் சிகிச்சையின் பின் உயிரிழந்துள்ளான்.
குறித்த விபத்துச் சம்பவம் கடந்த 25ம் திகதி வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வேலணை 4ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 25ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்றிருந்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் கடைக்கு சென்றுள்ளான்.
இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மதுபோதையில் இருந்ததுடன் இருவரும் தலைக்கவசம் அணியவில்லை. எனவும், மோட்டார் சைக்கிளை ஓட்டியவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் கூட இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட மேற்படி இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.