பெண் பொலிஸ் பாலியல் பலாத்காரம் – பொறுப்பதிகாரி தலைமறைவு


புதிதாக சேவையில் இணைந்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட செவனகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமறைவாகியுள்ள நிலையில்,

அவருக்கு எதிராக பி.சி.ஏ.டப்ளியூ.பி. எனப்படும் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பொறுப்பதிகாரியினால், எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செவனகல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பயில் நிலை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பாலியல் பலாத்கார சம்பவத்தின் பின்னர் கொழும்புக்கு வந்து

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொறுப்பதிகாரியை சந்தித்து முறைப்பாடளித்துள்ளார்.இந் நிலையிலேயே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த 14 ஆம் திகதி செவனகலைக்கு சென்றுள்ள பொறுப்பதிகாரி சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர், பாலியல் பலாத்காரம் நடந்த இடம் உள்ளிட்டவற்றை மேற்பார்வைச் செய்து அறிக்கையிட்டுள்ளனர்.

விசாரணைகளின் பிரகாரம், பொலிஸ் பொறுப்பதிகாரி, குறித்த 21 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பொலிஸ் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையிலும், உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தும்

பாலியல் பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து சப்ரகமுவ மாகாணத்தின் உயரதிகாரிகள் அறிந்திருந்தும், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கைஎ டுக்காது,

பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை எம்பிலிபிட்டிய பொலிஸ் வலயத்தின் வேறு ஒரு பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்து, பொறுப்பதிகாரியை காப்பாற்றும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் மிகத் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்,

வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரது உள நலம் தொடர்பிலும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *