ராஜபக்சவினரின் குப்பைகளைச் சுமக்க விரும்பவில்லை
எதிர்க்கட்சி என்ற ரீதியில் சர்வகட்சி அமைச்சு சூதாட்டத்தின் ஊடாக ராஜபக்சவினரின் குப்பைகளைச் சுமக்க விரும்பவில்லை.எனினும், சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து மக்களுக்குச் சேவையாற்றிய யு.எல்.எம்.பாரூக்கின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு இன்று ருவன்வெல்லயில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டின் தற்போதைய நிலைக்கு கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசே பொறுப்பு. அவருக்கு அதிகாரத்தை வழங்கிய எம்.பிக்களும் இந்நிலைமைக்குக் காரணம்.
இந்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 225 பேரும் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டும். தற்போது அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டிய காலமே உதயமாகியுள்ளது.
கடந்த காலங்களில் நாகத்தைக் காட்டியும், முட்டி உடைத்தும், பாணியைக் காட்டியும் மக்களை ஏமாற்றினர். இனிமேலும் ஏமாற்றாமல் புத்தியுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த வரிசையில் நிற்கும் யுகத்தால் சகலரும் அவதியுறுகின்றனர்.
இதற்குத் தீர்வை வழங்குமாறு மக்கள் கோரியபோதும் மொட்டு அரசு அதற்கு நிலையான தீர்வை வழங்கவில்லை. அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளாமல், சலுகைகளைப் பார்க்காமல் அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும். சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெரிய பதவிகளில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் கூட தமது குடும்ப உறுப்பினர்களைத் தமது பணியாளர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர்.
சர்வகட்சி ஆட்சியில் அந்நிலைமை நீங்க வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப உழைக்க வேண்டும்.
இதன்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எதிர்காலத்தில் அமைச்சர்களின் நலனுக்காக மக்கள் நிதியைப் பயன்படுத்தக்கூடாது” என சஜித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.