தூக்கிலிடப்பட்டு 91 வருடங்களின் பின் நிரபராதி என அறிவித்த நீதிமன்றம்
வெள்ளையின பெண் ஒருவரை படுகொலை செய்ததாக 1931 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பதின்ம வயது கறுப்பின அமெரிக்க சிறுவன் குற்றமற்றவர் என பென்சில்வேனிய நீதிமன்றம் ஒன்று தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.
தூக்கிடப்பட்ட சிறுவனின் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே சகோதரி கடந்த பல தசாப்தங்கள் மேற்கொண்ட போராட்டைத்தைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்புக் கிடைத்துள்ளது.
16 வயதான அலெக்சாண்டர் மக்லேய் வில்லியம்ஸ் எனும் சிறுவன் வெள்ளை இன யூரி சபை ஒன்றால் வெறுமனே நான்கு மணி நேர வழக்கு விசாரணையில் குற்றங்காணப்பட்டார்.
கிழக்கு அமெரிக்க மாநிலம் ஒன்றில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வயது குறைந்தவர் என அச்சிறுவன் இன்றும் பதிவாகி உள்ளார். இந்நிலையில் 91 ஆண்டுகளின் பின் நீதிபதி ஒருவர் வில்லியம்ஸ் நிரபராதி என தீர்ப்பு அளித்துள்ளார்.
இது குறித்து உயிரிழந்த சிறுவனின் சகோதரி கூறுகையில், ‘அவர் குற்றமற்றவர் என்பது எமக்குத் தெரியும் என்பதால் இந்தத் தீர்ப்பை மாற்றுவதற்கு நாம் விரும்பினோம். இப்போது அது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று வில்லியம்ஸின் 92 வயதான சகோதரி சுசி வில்லியம்ஸ் காட்டர் கண்ணீருடன் தெரிவித்தார்.