நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து கண்காணிப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களை பாதிக்கும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடுள்ளது.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களின்பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பொதுமக்களுக்கு இடையூறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்,
அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோதல் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் உடனடியாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அநாவசிய குழப்ப நிலைகளினால் வீதிகள் மூடப்பட்டு பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வாறு வீதிகள் மூடப்படுவதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உட்பட
வீதிகளில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.எ னவே இவ்வாறான போராட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.