தன்னை திட்டிய பெண்ணை கொலை செய்த மந்திரவாதி
பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தாயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த காலத்தில் நிறைய பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, அதற்கு பரிகாரமாக, தொடர்ந்து சாந்திகர்மா பூஜைகள் செய்த போதும், தலை நிமிர முடியாத அளவுக்கு தன் குடும்பத்திற்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அந்த சூனியத்தை அகற்றி பாதுகாப்பைப் பெறுவதற்காக கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள மந்திரவாதியிடம் அண்மைக்காலமாக அவர் சென்றுள்ளார்.
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து அந்த சூனியத்தை போக்க முயன்றுள்ளதுடன், மந்திரவாதியால் அந்த பெண்ணுக்கு தங்கத்திலான தாயத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது தாய் காணாமல் போனதாக அவரது மகன் எஹலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த எஹலியகொடை பொலிஸார் சந்திரிகாவின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளனர்.
அங்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கவனித்த பொலிஸார், ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை, அவரது தொலைபேசிக்கு அந்த எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.
மேலும், அதே எண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் கிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் கண்டறிந்து, மேலதிக தகவல்களைத் தேடிய போது, குறித்த நபர் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்தில் தங்க தாயத்தினை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது குறித்த தாயத்து காணாமல் போன பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை கிரியெல்லவிற்கு அழைத்து வந்து கொன்றதாகவும், தான் மந்திரவாதியின் சீடன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூனியத்தை அகற்றுவதாக குறித்த பெண்ணுக்கு வழங்கிய தாயத்து பலனளிக்கவில்லை என பல தடவைகள் குறித்த மந்திரவாதியை தொலைபேசியில் அழைத்து திட்டியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் “தாயத்தை பலப்படுத்தி மீண்டும் தாயத்தை போடுவதாக மந்திரவாதி கூறியுள்ளதால் கிரியெல்லவுக்கு வருமாறு கூறியுள்ளார்.
பின்னர் ஏப்ரல் 24ஆம் திகதி காலை அந்த பெண் எஹெலியகொடையில் இருந்து கிரியெல்லக்கு வந்துள்ள நிலையில், மந்திரவாதி தனது சீடனிடம், “இந்தப் பெண்ணால் நிறைய பிரச்சனைகள் உள்ளது, ஏதாவது செய் என்று கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த நபர், குறித்த பெண்ணிடம் குறுக்குவழி இருப்பதாக கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாயத்தை எடுத்துக் கொண்டு, உடலை காட்டில் நிறைய கிளைகளுக்கு அடியில் மறைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பொலிசார் குறித்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டுள்ள போதும் விலங்குகளால் சடலம் சேதப்படுத்தப்பட்டதால் உடல் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்ட பின்னர் பொலிஸார் மந்திரவாதியையும் கைது செய்துள்ளனர்.