நாட்டின் பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், ‘கவனம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.