முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கால அவகாசம்
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மானிய விலையில் கட்டண மீட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் தலைவர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண மீட்டர் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் இன்றியமையாத ஒன்று. இது தொலைபேசி மீட்டரில் இல்லை. சாரதிகளுக்கு மலிவு விலையில் கட்டண மீட்டரை வழங்குவதற்கு அல்லது மீட்டர்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். மேலும், மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பதிவு ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30க்கு முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் பின்னர், பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, பொலிஸாருடன் இணைந்து பயணியர் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.