பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த(08.02.2024) ஆம் திகதி நடந்தது.
இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர். பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது.
பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.
மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பி.எம்.எல்-கியூ) மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி(ஐபிபி) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.
50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார்.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.