ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் தளர்த்தியுள்ளது.
அந்நாட்டில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்தே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் நேற்று (01.01.2024) உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததுடன் வீதிகள் பிளந்து கடுமையாக சேதம் அடைந்தன.
90 நிமிடங்களில் 21 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பானிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் ஜப்பானிற்கான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.