பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள இராணுவ சோதனைச் சாவடியொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள தரபன் நகரில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 34 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தினால் இராணுவ சாவடியின் பிரதான வாயிலில் மோதப்பட்டு இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் குறிவைத்து வந்த இந்த சட்டவிரோத ஆயுதக் குழுவினர், பாகிஸ்தானிய தலிபான்களுடன் தொடர்புடையவர்களென கூறப்படுகிறது.