காசா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது. இதனிடையே காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அந்த மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிரடியாக நுழைந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கையெறி குண்டுகள், தோட்டாக்கள், கவச உடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவம் நுழைந்த பின்னர் மருத்துவமனைக்கான தண்ணீர், மின்சாரம், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.