மட்டக்களப்பில் பதற்றம் – பெண்களை சரமாரியாக தாக்கிய பொலிஸார்


மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை பொலிஸார் தாக்கியது மட்டுமன்றி அவ்விடத்திலிருந்து இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய போராட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் அதிபர் பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பெருமளவான மக்களின் பங்களிப்புடன் போராட்டம் ஆரம்பமாகிய நிலையில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிஸார் தாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *