இன்று உலக சிறுவர் தினம்
உலக சிறுவர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் சிறுவர்களுக்காக பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, சிறுவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய மிருகக்காட்சி திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து பூங்காக்களையும் சிறுவர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை, ரிதியகம சபாரி பூங்கா போன்றவற்றை இலவசமாக பார்வையிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த வாய்ப்புக்கு உரித்துடையவர்கள் என திலக் பிரேமகாந்த தெரிவித்ததுடன், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிறுவர் தின கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.