கனடாவில் மற்றுமொரு சீக்கியர் சுட்டுக்கொலை – இந்தியா நுழைய தடை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் சீக்கியர்களுக்கு “காலிஸ்தான்” என தனி நாடு கோரி பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.
இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன.
இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குரல் கனடா நாட்டில் வலுப்பெற்றிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதியும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடா நாட்டின் வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவிற்கு பங்கிருப்பதாக சில தினங்களுக்கு முன் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
தொடர் நடவடிக்கையாக இந்திய தூதரக அதிகாரியையும் கனடா அரசு வெளியேற்றியது.
இந்தியர்களை அதிர வைத்த இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு, பதில் நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் “விசா” எனப்படும் உள்நுழையும் அனுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து சில வருடங்களாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பலர் செல்கின்றனர்.
இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சென்று கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017ஆம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.