பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட பெண் கைது


பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹெட்டிபொல நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், சந்தேக நபர் ஹிங்குராக்கொட, தனயாம வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 19ஆம் திகதி பிற்பகல் தாம் பொலிஸ் நிலைய அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் வந்து தன்னை கடுமையான வார்த்தைகளால் திட்டி தனது கடமைக்கு இடையூறு செய்ததாக முறைப்பாடு செய்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுஜித் பிரியங்கரவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள், பிங்கிரிய, போவத்த பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த போது சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு செய்த பொலிஸ் பரிசோதகர் கட்டுநாயக்க பிரதேசத்தில் கடமையாற்றும் போது சந்தேகநபரான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உறவு நிறுத்தப்பட்டதால் குறித்த அதிகாரி பணியாற்றும் இடங்களுக்கு சென்று தகராறு செய்யும் வகையில் நடந்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *