கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி – வெளியான முக்கிய தகவல்கள்
கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய அண்மையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது.
18 வயதுடைய புவனேஷ்வரன் ஆர்த்தி என்ற மாணவி கடந்த ஒரு வாரமாக காணாமல்போயுள்ளார்.
குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த மாணவியின் தாய் கூறுகையில், சம்பவ தினத்தன்று காலை பத்து மணிக்கு மேலதிக வகுப்பிற்காக மாணவியின் தந்தையே அந்த மாணவியை அழைத்து சென்று விட்டுள்ளார்.
எனினும் காலை பத்து மணிக்கு நடக்க வேண்டிய முதல் வகுப்பு நடத்தப்படவில்லை எனவும், குறித்த மாணவி வகுப்பிலுள்ள மாணவர்களிடம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையில் கதைத்துக் கொண்டிருந்த நிலையில் வகுப்பிலிருந்து வெளியில் சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து 12 மணிக்கு மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மகளை காணாது தேடியுள்ளார். இவ்வாறான நிலையில் 12.15 மணியளவில் காணாமல் போன மாணவியிடமிருந்து தாய்க்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், தாயை அழ வேண்டாம் எனவும், தங்கையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்திற்கான சிம் அந்த மாணவியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.