சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை வர்த்தக நிலையங்களிலும் ஆராயப்பட்டன.
அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதால் அதன் விற்பனையை நிறுத்தியுள்ளதாக மொத்த வியாபாரிகள் பலர் கூறுகினர்.
சில்லறை விற்பனைக் கடைகளிலும் இதே நிலையே காணப்படுகிறது.
சில சில்லறை விற்பனைக் கடைகளில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கீரி சம்பா அரிசி எந்த வர்த்தக நிலையத்திலும் காணப்படவில்லை.
கொழும்பிற்கு வெளியேவும் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களினால் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பின்னணியில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பிலான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கீரி சம்பா கிலோ ஒன்று 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், நாட்டரிசி கிலோ 220 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 210 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களை கோரியுள்ளது.