மூன்று சிசுக்களுடன் கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு
மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் துரதிஷ்டவசமாக ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
மாகொல பிரதேசத்தை சேர்ந்த லவந்தி சதுரி ஜயசூரிய என்ற 36 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி 8 வருடங்களின் பின்னர் கர்ப்பமடைந்த இவர், தனியார் வைத்தியசாலை வைத்தியரின் ஆலோசனையின் பேரில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பமடைந்து 23 வாரங்களுக்கு பின்னர் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கவலைக்கிடமான நிலையில் இருந்த லவந்தி மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்ததாக உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த மரணம் ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.