வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை


94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *